காதலை மறக்க பூஜை செய்வதாக அத்துமீறிய பூசாரி..! 3 ஆண்டு நீடித்த கொடுமை

சென்னை பூந்தமல்லி அருகே காதலை மறக்க வைக்க மாந்திரீக பூஜை செய்வதாகக் கூறி 16 வயது இளம்பெண்ணை அழைத்துச் சென்று மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமை செய்து வந்த கோவில் பூசாரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான்.
சென்னை பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த 19 வயதான இளம் பெண் ஒருவர், மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், அய்யப்பன் தாங்கலைச் சேர்ந்த கோவில் பூசாரியான சந்திரமௌலி என்ற நபர், கடந்த 3 ஆண்டுகளாக தொடர் பாலியல் தொல்லை அளித்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அங்குள்ள கோவில் ஒன்றில் பூசாரியாகப் பணியாற்றி வந்த சந்திரமௌலி, தனது தந்தைக்கு 20 ஆண்டுகாலப் பழக்கம் என்று பாதிக்கப்பட்ட பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன் அந்தப் பெண் ஒருவரை காதலித்ததாகவும் அது சந்திரமௌலிக்குத் தெரியவந்து, காதலை சேர்த்து வைப்பதாகக் கூறி அவரிடம் நெருங்கிப் பழகியதாகவும் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் பெண்ணின் பெற்றோரிடம் காதல் விவகாரத்தை தெரிவித்த சந்திரமௌலி, அவரது ஜாதகத்தில் தவறு இருப்பதாகவும் சில மாந்திரீக சிகிச்சைகளை செய்தால் உங்கள் மகள் காதலை மறந்துவிடுவாள் என்றும் கூறியிருக்கிறான்.
அதனை பெற்றோரும் நம்பவே, சிறுமியை எவ்வித தடைகளும் இன்றி அடிக்கடி சந்திப்பதற்கான வாய்ப்பு சந்திரமௌலிக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனை சாதகமாக்கி, தன்னிடம் சந்திரமௌலி தவறாக நடக்க முயன்றதாக புகாரில் அப்பெண் குறிப்பிட்டிருக்கிறார். 16 வயது சிறுமியாக இருந்த தன்னை தனது பேச்சாலேயே சந்திரமௌலி அவனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறான் எனவும் புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
தனது தந்தையின் அதீத ஜாதக நம்பிக்கையை பயன்படுத்தி, தான் என்ன கூறினாலும் எடுபடாதவாறு அவரை மூளைச்சலவை செய்து வைத்திருந்ததாகவும் இளம் பெண் கூறியுள்ளார். புது வீடு மாறி வந்த பின்னரும் விடாமல் தொடர்ந்து வந்து தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வரும் சந்திரமௌலி, எதிர்ப்பு தெரிவித்தால் பெற்றோரின் வாழ்க்கை கௌரவம் அத்தனையையும் சீரழித்து விடுவேன் என மிரட்டுவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
தன்னைப் போலவே மேலும் இரண்டு பெண்களை வசப்படுத்தி வைத்திருக்கும் சந்திரமௌலி, திருமணத்துக்குப் பின்னும் நீ எனக்கு ஒத்துழைக்க வேண்டும் என மிரட்டுவதாகவும் புகாரில் இளம்பெண் குமுறியுள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் சந்திரமௌலியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தந்தையின் ஜாதக நம்பிக்கையை பயன்படுத்தி, தன்னை சீரழித்து வந்தவன் குறித்து வெளியில் சொல்லவே, அந்தப் பெண்ணுக்கு மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகத்தான் பெண் பிள்ளைகளிடம் பெற்றோர் மனம் விட்டுப் பேசுங்கள் என மனோதத்துவ நிபுணர்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றனர்.
No comments