காதல் கசந்ததால் காப்பகமே தாய் வீடு..! ஜிம் மாஸ்டரால் ஸ்டாப்பான லவ்

மதுரையில் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி கருத்து வேறுபாடால் பிரிந்த நிலையில், வீட்டில் ஏற்றுகொள்ளாததால் காப்பகத்தில் தவிப்பதாக காதலில் விழுந்த பெண் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். ஜிம் மாஸ்டரால் காதல் வாழ்வில் விழுந்த விரிசல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..
மதுரை பெருங்குடியில் வசித்துவரும் 26 வயது இளைஞர் ராஜேஷும், 21 வயது கனிமொழியும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். மதுரை விமான நிலையத்தில் எக்ஸிக்யூட்டிவ் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வரும் ராஜேஷ் மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார்.
திருமணமாகி 3 வருடங்களாகியும் குழந்தை இல்லாததால் கனிமொழியை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது கருப்பையில் நீர்க்கட்டி உள்ளதாகவும், உடற்பயிற்சியின் மூலம் நீர்க்கட்டியைக் கரைக்கலாம் எனவும் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து கருப்பை நீர்க்கட்டியைக் கரைப்பதற்கு மதுரை வில்லாபுரத்தில் உள்ள யோகேஷ் கண்ணா என்பவர் நடத்தும் உடற்பயிற்சிக் கூடத்தில் கனிமொழியை அவரது கணவர் சேர்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
அதன்பின்னர், கனிமொழிக்கு ஜிம் மாஸ்டர் யோகேஷ் கண்ணாவுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. தனது காதல் கணவன் தினமும் குடித்து விட்டு வந்து தன்னை அடித்து துன்புறுத்தி வருவதாகவும், தன்னை ராஜேஷ்யிடம் இருந்து காப்பாற்றுமாறும் கூறியுள்ளார்.
இதையடுத்து, கனிமொழியை அவரது வீட்டில் இருந்து அழைத்து சென்று நரிமேடு பகுதியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தங்கவைத்துள்ளார் யோகேஷ்.
இந்நிலையில், தனது காதல் மனைவி, நகைகள் மற்றும் பணத்துடன் ஜிம் மாஸ்டருடன் ஓடி விட்டதாக பெருங்குடி காவல்நிலையத்தில் ராஜேஷ் புகார் ஒன்றை அளித்தார். அதன்பேரில் கனிமொழி, ராஜேஷ், யோகேஷ் ஆகியோரை திருமங்கலம் நகர் காவல் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்,
விசாரணையில் ராஜேசுடன் வாழப் பிடிக்கவில்லை என்றும், தொடர்ந்து தனக்கு விவாகரத்து பெற்றுத் தரவேண்டும் என்றும் கனிமொழி கூறியதை தொடர்ந்து காவல்துறையினர் கனிமொழியை விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், வீட்டை விட்டு வெளியில் வந்து காதல் திருமணம் செய்து கொண்டதாலும், தனது நடத்தை குறித்து காதல் கணவன் அவதூறு பரப்புவதாலும் பெற்றோர் வீட்டில் ஏற்க மறுப்பதால் அனாதையாக விடுதியில் தவிப்பதாக கனிமொழி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
சிறுவயது முதலே தங்கள் பெண்ணுக்கு நல்லது எது? கெட்டது எது? என்று ஆசை ஆசையாய் அக்கறையுடன் பார்த்து, பாசத்தை கொட்டி வளர்க்கும் பெற்றோரை உதறிவிட்டு, பருவ வயது ஈர்ப்பில் காதலனை நம்பி வீட்டை விட்டுச் செல்லும் பெண்களுக்கு, எந்த மாதிரியான விபரீதமெல்லாம் சமூகத்தில் காத்திருக்கும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம்..!
No comments