வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டானாம்..! ரூ 3 கோடி சுருட்டிய போலி பி.ஆர்.ஓ

வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டானாம்..! ரூ 3 கோடி சுருட்டிய போலி பி.ஆர்.ஓ
தமிழக அரசின் தலைமை செயலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பதாக ஏமாற்றி, அரசு வேலை பெற்றுத்தருவதாக கூறி 41 பேரிடம் இருந்து 3 கோடி ரூபாயை சுருட்டியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னையில் தமிழ்நாடு அரசு தலைமை செயலக வளாகத்தில் தினமும் ஏராளமானோர் அரசு வேலை வாய்ப்பு, பணியிட மாறுதல், பதவி உயர்வு, மருத்துவ கல்விக்கு சீட்டு, என பல்வேறு கோரிக்கைகளுக்காக கையில் மனுக்களுடன் வலம் வருவதை பார்க்க இயலும்..!
இவர், அவருக்கு தெரிந்தவர்..! அவர் சொன்னா போதும் மறுபேச்சே கிடையாது என்று சிபாரிசு..., சிபாரிசிக்கு சிபாரிசு..! என்று தங்கள் காரியங்களை சாதித்துக்கொள்ள குறுக்கு வழிதேடும் நபர்களை குறிவைத்து ஆசைகாட்டி ஏமாற்றி பணம் கறப்பதற்கு என்றே அரசியல் கட்சி பிரமுகர்கள், போலி செய்தியாளர்கள், போலி அதிகாரிகள் என வித விதமான மோசடி பேர்வழிகள் உள்ளே வலம் வருகின்றனர்.
அந்தவகையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள என்.மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்ற அரசு ஒப்பந்ததாரருக்கு, சாத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஜீப் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் காவலர் ராஜபாண்டி என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
திருமங்கலம் நகராட்சியில் அதிகாரியாக உள்ள தனது சித்தப்பா திருவள்ளுவனின் மகன் சரவணகுமார் சென்னையில் தமிழக அரசின் தலைமை செயலகத்தில் பி.ஆர்.ஓ.வாக பணியாற்றி வருவதாக கூறி கண்ணனிடம் ராஜபாண்டி அறிமுகப்படுத்தியுள்ளார். ஒப்பந்ததாரரான கண்ணனிடம், தனக்கு அனைத்து அதிகாரிகளையும் தெரியும் என்றும், எந்த துறையில் வேண்டுமானாலும் அரசு வேலையோ, அரசு ஒப்பந்தப் பணிகளையோ எளிதாக வாங்கித் தருவதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார் சரவணக்குமார்.
நெற்றியில் குங்குமப்பொட்டுடன் பவ்யமாக இருந்த சரவணகுமாரை பார்த்ததும் வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான் என்று நம்பிய கண்ணன், தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 41 பேரிடம் அரசு வேலை மற்றும் அரசு ஒப்பந்த பணிகள் பெற்றுத்தருவதாக கூறி 2 கோடியே 73 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
வங்கி கணக்கு மூலமாகவும், நேடியாகவும் பணத்தைப் பெற்றுக்கொண்ட சரவணக்குமார் அரசு வேலை வாங்கிக் கொடுக்காமலும் அரசு ஒப்பந்தப் பணிகளை பெற்றுக்கொடுக்காமலும் 3 ஆண்டுகளாக இழுத்தடித்து வந்துள்ளார்.
கடந்த 6 மாதங்களாக கொரோனாவை காரணம் காட்டி சமாளித்த சரவணக்குமாரால், அண்மையில் தொடர்ந்து புதிய அரசு பணியாளர்கள் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியானதால் தப்பிக்க இயலவில்லை. பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
இதுகுறித்து, விருதுநகரில் உள்ள மாவட்டக் குற்றப் பிரிவில் ஒப்பந்ததாரர் கண்ணன் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்த போது தலைமை செயலகத்தில் சரவணக்குமார் என்ற பெயரில் பி.ஆர்.ஓவே இல்லை என்பதும் அவர் ஒரு போலி என்பதையும் கண்டறிந்தனர். இவரிடம் மட்டுமில்லாமல் மேலும் சிலரிடம் பல லட்சங்களை மோசடி செய்துள்ள சரவணக்குமார் மொத்தம் 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வாரிச் சுருட்டியது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.
சரவணக்குமாரை பி.ஆர் ஓ என்று அறிமுகப்படுத்திய காவலர் ராஜபாண்டி தனது போலீஸ் பவரை பயன்படுத்தி தப்பித்த நிலையில், போலி பி.ஆர் ஓ சரவணக்குமார் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். இந்த மோசடிக்கு உதவியாக இருந்த சரவணக்குமாரின் தந்தை திருவள்ளுவனை போலீசார் தேடி வருகின்றனர்.
லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பகங்களில் பதிந்து விட்டு அரசு பணிக்காக காத்திருக்கும் நிலையில், சிபாரிசின் மூலம் கையூட்டு கொடுத்து அரசு வேலையை பெற்றுவிடத்துடிக்கும் பேராசை கொண்டவர்கள், சரவணக்குமார் போன்ற மோசடி பேர்வழிகளிடம் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்து ஏமாந்துவிட்டு, காவல் நிலையங்களின் வாசலில் ஏக்கத்துடன் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் தலைமை செயலகத்திற்கு வரும் சம்பந்தமில்லா நபர்களின் பின்னணியை அறிந்து ஆராய்ந்த பின்னரே உள்ளே நுழைய காவல்துறையினர் அனுமதிக்க வேண்டும், இது போன்ற மோசடிகளை தடுக்க வேண்டுமானால், தங்களுக்கு செல்வாக்கு இருப்பதாக காட்டிக் கொண்டு தலைமை செலகத்திற்குள் சுற்றித்திரியும் சந்தேக நபர்கள் தடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்..!
No comments