ஆசைப்பட்ட பாடம் கிடைக்கவில்லையே...படிப்பை நிறுத்திவிட்டு ஆடு மேய்த்த பிளஸ்-1 மாணவி...

ஆடு மேய்த்த பிளஸ்-1 மாணவி:
கோவில்பட்டி: ஆசைப்பட்ட பாடம் கிடைக்காததால் மனமுடைந்த மாணவி பள்ளியில் இருந்து விலகி ஆடு மேய்க்க சென்றார். இது கலெக்டருக்கு தெரிய வரவும் உடனடியாக பள்ளியில் சேர்க்கும்டி உத்தரவிட்டார். இதனால் அந்த மாணவி மட்டுமின்றி பெற்றோரும் மகிழ்ச்சியடைந்தனர். தற்போதைய மாணவ, மாணவிகளிடம் கல்வியில் சிறந்த விளங்கி சாதனை படைக்கவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு படிப்பில் ஆர்வம் இருக்கும், மருத்துவம் படித்து சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் மாணவிகளிடம் அதிக அளவில் காணப்படுகிறது. சிலர் விரும்பிய படிப்பில் சேர முடியாததாலும் நுழைவுத்தேர்வில் தோல்வி அடைந்தாலோ விரக்தியடைந்து விபரீத முடிவை தேடிக்கொள்கின்றனர். இங்கே ஒரு மாணவி தனக்கு விரும்பிய பாடம் பள்ளியில் கிடைக்காததால் விரக்தி அடைந்து படிப்பை நிறுத்திவிட்டு ஆடு மேய்க்க சென்றார். இதுகுறித்த தகவல் வைரலாக பரவியது. அந்த மாணவியை பற்றி பார்ப்போம்..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பூதலாபுரத்தில் அரசு பள்ளி உள்ளது. முதலில் உயர்நிலைப்பள்ளியாக செயல்பட்டு வந்த இந்த பள்ளி 2010ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டு மேல்நிலை பள்ளியானது. இதனால் சுற்றுப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஏழை மாணவ, மாணவிகள் சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் படித்து வந்தனர். இதில் பிளஸ்-1ல் 54 பேரும், பிளஸ்-2வில் 55 பேரும் இந்த கல்வியாண்டில் படித்து வருகிறார்கள்..
இதுபோல் வைஷ்ணவி(16) என்ற மாணவி 10ம் வகுப்பு முடித்துவிட்டு 11ம் வகுப்பிற்கு அடியெடுத்து வைத்தார். தான் விரும்பிய பாடத்தை எடுத்து படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும். பெற்றோரை காப்பாற்ற வேண்டும் என்ற ஆசையுடன் 11ம் வகுப்பில் நுழைந்தார். அதன்பிறகு தலைமை ஆசிரியரை பார்த்து, எனக்கு வரலாறு பாடம் என்றால் கொள்ளை பிரியம். தயவு செய்து அந்த பாடப்பிரிவில் என்னை சேர்த்துவிடுங்கள் என்றார். அதற்கு தலைமை ஆசிரியர், ``உன் ஆசை நியாயமானதுதான். ஆனால் அந்த பிரிவு நிரம்பி விட்டது. வேண்டுமென்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளது அதில் சேர்ந்து கொள்’’ என்றார். மாணவி வைஷ்ணவியோ, ``சார் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க எனக்கு விருப்பமில்லை. எப்படியாவது கருணை காட்டி நான் கேட்ட வரலாற்று பாடத்தை தாருங்கள்’’ என்று கெஞ்சினார். ஆனால் தலைமை ஆசிரியர் அதில் வாய்ப்பில்லை என்று உறுதியாக சொல்லி விட்டதால். மாணவி அதிர்ச்சியடைந்தார். இருப்பினும் விருப்பமில்லாத கம்ப்யூட்டர் சயின்ஸ்சில் சேர்ந்தார். ஆனால் அதில் அவரால் கவனம் ெசலுத்த முடியவில்லை..
இனி நாம் படித்தால் என்ன... படிக்காவிட்டால் என்ன? என்ற விரக்தியுடன் பள்ளியில் இருந்து வெளியேறினார். பெற்றோரிடம் நடந்தது பற்றி கூறினார். அவர்களும் மகளுக்காக கவலைப்பட்டனர். படிப்புதான் போய்விட்டது என வைஷ்ணவி வீட்டில் முடங்கி போய்விடவில்லை. தங்கள் வீட்டு ஆடுகளை வெளியில் சென்று மேய்த்து வந்தார்.இந்த தகவல் வெளியே தெரிந்துவிட்டது. அயன்வடமலாபுரம் சமூக சேவகர் வரதராஜன்(45) கவனத்திற்கு சென்றது. அவர் உடனே இதுதொடர்பாக கலெக்டர் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி ஆகியோரை நேரம் சந்தித்து புகார் மனு அளித்தார். மாணவியின் நிலை பற்றி எடுத்து கூறினார். இது வாட்ஸ் அப்பிலும் வைரலாக பரவியது. உடனடியாக கலெக்டர் சந்தீப் நந்தூரி கல்வி அதிகாரிக்கு உத்தரவிடவே அவர் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார். மீண்டும் அந்த மாணவி கேட்கும் பாடம் கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.. இதைத்தொடர்ந்து மாணவி வைஷ்ணவி மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டார். மாணவி வைஷ்ணவி தவிர அதே பகுதியை சேர்ந்த ரகுபதி, அமிர்தகணேசன், உத்திரகுமார், பானுமதி, ராஜலட்சுமி ஆகிய 5 பேரும் வரலாற்று பாடம் கிடைக்காததால் அவர்களும் வைஷ்ணவியைப்போன்று பள்ளியை விட்டு விலகி சென்றுவிட்டனர். அந்த 5 மாணவர்களுக்கும் அவர்கள் விரும்பிய பாடம் வழங்கப்பட்டு விட்டது..
No comments