Header Ads

Header ADS

கொரோனா கால வசூல் ராஜாக்கள் இவர்கள் தான்..! பெயர் பட்டியல் வெளியானது


தமிழகத்தில் கொரோனா காலத்தை பயன்படுத்தி நோயாளிகளிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்ததாக 9 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் நோயாளிகளிடம் வசூல் ராஜாக்களாக வலம் வந்த அந்த மருத்துவமனைகளின் பெயர் விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஆரம்ப கட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர தொடங்கிய நிலையில் கொரோனா சிகிச்சைக்கான அனுமதி தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டது.

இதனை தங்களுக்கு சாதகமாக்கிய சில தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளை தங்க முட்டை இடும் வாத்துக்களாக கருதி எவ்வளவு பணம் பெற இயலுமோ அந்த அளவிற்கு பணம் வசூல் செய்தனர். இதனை கட்டுப்படுத்த கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்தது. இருந்தாலும் சில தனியார் மருத்துவமனைகள் அடங்கியபாடில்லை.

இது குறித்து தொடர்ந்து புகார்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் கொரோனா நோயாளிகளிடம் வசூல் ராஜாக்கள் போல கூடுதல் கட்டணம் வசூலித்த 9 மருத்துவமனைகள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க வழங்கப்பட்ட அனுமதி திரும்பபெறப்பட்டுள்ளது.

அதன்படி பல மடங்கு கட்டணம் வசூலித்ததாகவும், நோயாளிகள் உயிரிழப்பை கட்டுப்படுத்த தவறியதாகவும் சேலம் ப்ரியம் மருத்துவமனை, கீழ்பாக்கம் பீவெல் மருத்துவமனை, தூத்துக்குடி சிட்டி மருத்துவமனை, திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவமனை, அரும்பாக்கம் அப்பாசாமி மருத்துவமனை, தாம்பரம் இந்து மிஷன் மருத்துவமனை, விருது நகர் சிட்டி மருத்துவமனை, கோயமுத்தூர் ஸ்ரீ லட்சுமி மெடிக்கல் செண்டர் மருத்துவமனை, ராணிப்பேட்டையில் 150 ஆண்டுகளாக மருத்துவ சேவையாற்றி வருவதாக கூறப்பட்ட ஸ்கட்டர் நினைவு மருத்துவமனை என மொத்தம் 9 மருத்துவமனைகள் பலகட்ட புகாருக்குள்ளானதால் கொரோனா சிகிச்சைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிக கட்டணம் வசூலித்த புகாரில் சிக்கிய மேலும் 18 பிரபல தனியார் மருத்துவமனைகள் பணத்தை திருப்பிக் கொடுத்து சமரசம் செய்து கொண்டுள்ளதால் அவற்றின் அனுமதி ரத்தாகவில்லை என்பது குறிப்பிடதக்கது.

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.