உங்கள் செல்லக் குழந்தைகளை மகிழ்ச்சியாக மட்டுமின்றி, பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்வது எப்படி?

வாழ்க்கையில் பெற்றோராக நமது பயணம் மகிழ்ச்சிகரமான ஒன்றாகும். குழந்தை வளரும் ஒவ்வொரு நாளும் பெற்றோர் எதிர்கொள்ளும் விஷயங்களின் தாக்கமும் அதிகரிக்கும். உலகின் சாராம்சத்தை அறிந்து கொள்ளத் தொடங்கும் நாட்களில், குழந்தையிடமிருந்து ஒவ்வொரு நாளும் புதுப்புது கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கும். அதே சமயம் குழந்தையின் ஆரோக்கியம் சார்ந்த கேள்விகள் பெற்றோர் மனதில் தினம் தினம் புதிது புதிதாய் உதித்துக் கொண்டே இருக்கும். உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை எப்படி நீங்கள் அறிவீர்கள்? உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை மேன்மேலும் பாதுகாக்க நீங்கள் என்ன செய்வீர்கள்?
குழந்தை உட்கொள்ளும் உணவு மட்டுமின்றி, குழந்தை வளரும் இடம் மற்றும் சூழலை கூட பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை ஆகிறது. வீட்டை குழந்தைக்கு ஏற்ப பாதுகாப்பாக வைத்தல், கூர்மையான பொருட்களை அப்புறப்படுத்துதல், வெளி நபர்களிடமிருந்து தொற்று பரவாமல் பாதுகாப்பது, குழந்தைகள் நல மருத்துவரிடம் சீரான இடைவெளியில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது, எல்லாவற்றுக்கும் மேலாக இரவு நேரங்களில் 'டயப்பர்' மாற்றுதல், பசித்தால் சரியான நேரத்திற்கு உணவு தயார் செய்து வைத்தல் என அடுக்கிக்கொண்டே போகலாம்.
இப்போது நிறைய பெற்றோர் குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்து நிறையவே ஆராய்ச்சி செய்கிறார்கள். இந்த தடுப்பூசி அவசியமா? இந்த தொற்று நம் வீட்டில் பரவுகிறதா? எதற்காக இந்த தடுப்பூசி? இது குழந்தையின் நலனில் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ? என பல கேள்விகள் அவர்கள் மனதில் எழுகிறது. முக்கியமாக ஆரம்ப காலகட்டத்தில் போடப்படும் அடுத்தடுத்த தடுப்பூசி குறித்து அவர்களுக்கு நிறைய கேள்விகள் மற்றும் அச்சம் ஏற்படுகிறது. மேலும் ஒரே சமயத்தில் நிறைய தடுப்பூசிகள் போடுவது குழந்தைக்கு மிகுந்த வலி அல்லது வேதனையை உண்டாக்கலாம்.
பல்வேறு ஆய்வுகளில் கூறப் படுவது என்னவென்றால், ஒரே முறை 2 தடுப்பூசி போடும் போது குழந்தைகளுக்கு மிகுந்த வலி மற்றும் அசவுகரியம் ஏற்படுகிறது என பெற்றோர் கூறுவதாக குறிப்பிடப்படுகிறது. மேலும் ஆய்வுகளில் கூறப்படும் தகவல்களை வைத்து பார்க்கும் போது, கூடுதலாக பணம் செலவானாலும் பரவாயில்லை தடுப்பூசி போடுவதால் குழந்தைகளுக்கு எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது என்பதில் பெற்றோர் உறுதியாக உள்ளனர்.
இப்போது பெற்றோரின் இந்த கவலைக்கு ஒரு தீர்வு பிறந்துள்ளது. ஆம், காம்பினேஷன் வாக்சின் எனப்படும் கூட்டு தடுப்பூசியின் வருகை மூலம் 2 அல்லது அதற்கும் மேலான தடுப்பூசிகளை ஒரே முறையில் ஒரே இன்ஜெக்சன் மூலம் போடும் முறை உதயமாகி இருக்கிறது. இதனால் நீங்கள் தடுப்பூசி போட மருத்துவரிடம் செல்லும்போது, உங்கள் குழந்தைக்கு பல ஊசிகள் போடுவதற்கு பதிலாக ஒரே ஊசி மூலம் அனைத்து பிரச்சினைக்குமான தீர்வை அடைந்து விடலாம். இது குழந்தை, பெற்றோர் என இரு தரப்பினருக்கும் நன்மை பயக்கும்.
இதன் அர்த்தம் என்னவெனில்,
* நீங்கள் குறைந்த முறை மருத்துவரை சந்தித்தால் போதும். அடிக்கடி சென்று வர வேண்டிய அவசியம் இருக்காது.
* சரியான நேரத்தில் குழந்தையின் பாதுகாப்பை ஊர்ஜிதம் செய்யலாம்.
* குழந்தைக்கு வலி, அசவுகரியம் அதிகமாக இருக்காது.
* பெற்றோர்கள் அவர்கள் வேலைக்கு அதிக இடைஞ்சல் ஏற்படாமல் தடுக்கலாம். அதிக பணம் செலவழிப்பதை குறைக்கலாம்.
* இந்தக் கூட்டு தடுப்பூசி (combination vaccine) 6 விதமான நோய் தாக்கத்தில் இருந்து குழந்தையை பாதுகாக்கும்.
இந்தக் கூட்டு தடுப்பூசி பின்வரும் 6 நோய் தொற்றுகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கிறது. அதன் விவரம் வருமாறு:-
போலியோ (polio):- போலியோ, வைரஸ் மூலம் பரவும் ஒரு அதி தீவிரமான நோய் தொற்று. உலக சுகாதார மையம், போலியோவால் பாதிக்கப்படுவோரில் 200-ல் ஒருவர் சரி செய்ய முடியாத பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என கூறுகிறது. மேலும் இதனால் பாதிக்கப்படும் குழந்தைகளில் 5 முதல் 10 சதவீதம் வரையிலான குழந்தைகள் சுவாசத் தசைகள் அசையாத நிலை அடைவதின் காரணத்தால் மரணிக்கிறார்கள்.
பெர்டுசிஸ் (pertussis):- பெர்டுசிஸ் அல்லது கக்குவான் இருமல் எனக் கூறப்படும் இந்த தொற்று ஒரு குழந்தையிடம் இருந்து மற்றொரு குழந்தைக்கு பரவும் அபாயம் உள்ளது. குழந்தைகளிடையே 4 வாரங்களில் இருந்து 8 வாரங்கள் வரை தொடர்ந்து இந்த இருமல் இருக்கும்.
டிப்தீரியா (Diphtheria):- டிப்தீரியா ஒரு தொற்று நோய். இது குழந்தையின் தொண்டை மற்றும் சுவாச குழாயில் பரவி உடல் உறுப்புகளில் நச்சுத் தன்மையை ஏற்படுத்தும். இந்த நோய்த்தொற்று ஏற்படும் குழந்தைகளில் 5 முதல் 10 சதவீதம் வரையிலானோர் மரணிக்கிறார்கள்.
டெட்டனஸ் (Tetanus):- டெட்டனஸ் என்பது தசைகளை கடினமாக இறுகச் செய்யும் மருத்துவ பிரச்சினை என்று கூறலாம். இது தாடையை அசைக்க முடியாதபடி செய்து, சாப்பிட முடியாமல் எந்த உணவையும் விழுங்க முடியாமல் செய்யும்.
ஹெபடைடிஸ் பி (Hepatitis B):- இது கல்லீரலை பாதிக்கக்கூடிய ஒரு வைரஸ் தொற்று. இது கடுமையானதாகவும், நாள்பட்ட நோயாகவும் நீடிக்க வாய்ப்புள்ளது.
எச்.ஐ.பி. (Hemophilus Influenzae Type B):- எச்.ஐ.பி. எனும் இந்த பாக்டீரியா, நிமோனியா, மூளைக்காய்ச்சல் மற்றும் பல கொடிய பிரச்சினைகளை விளைவிக்கக் கூடும். இது 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் இடையே ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. தடுப்பூசி போடுவதால் இந்த நோய் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும். மேலும் குழந்தை பிறந்த ஆரம்ப காலத்திலேயே இந்த தடுப்பூசி போட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
இந்த காலகட்டத்தில் ஆரோக்கியம் தான் மனிதனின் மிகப்பெரிய சொத்தாக கருதப்படுகிறது. இந்த கூட்டு தடுப்பூசி மேற்கண்ட 6 விதமான நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கக் கூடியது. உங்கள் குழந்தை 0-2 மாதங்களில் இருக்கும் போதே குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்று, கூட்டு தடுப்பூசி மூலம் குழந்தைகளை மேற்கண்ட 6 விதமான நோய்களில் இருந்து எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்? என கலந்து ஆலோசிக்க வேண்டியது அவசியமாகும்.
No comments